தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (20.07.2021) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிட செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பை 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு உயர்த்த வேண்டும். இருபோக சாகுபடி நிலங்களை 10 லட்சம் ஹெக்டேரிலிருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப, விதைகள், ரசாயன உரங்கள் போன்ற வேளாண்மை இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விரிவாக்க பணிகள் தொய்வின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
பருத்தி, சூரியகாந்தி பயிர்களில், உரிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, இப்பயிர்களின் உற்பத்தித்திறனை உயர்த்தி, அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழ்நாடு இடம்பிடிக்க வேண்டும். விவசாயிகளின் வயல்களில் மழைநீரினை சேமிக்க பண்ணை குட்டைகள், தொகுப்பு அணுகுமுறையில் நுண்ணீர் பாசனத் திட்டம், விவசாயிகளை ஒருங்கிணைத்து, சிறுதானியங்களில் சிறப்பு இயக்கம், இயற்கை விவசாய முறையினை பிரபலப்படுத்துதல், தோட்டக்கலை பயிர்களுக்கு தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.
சூரிய சக்தி
அபரிமிதமாக கிடைக்கும் சூரிய சக்தியை பாசனத்திற்கு பயன்படுத்திட ஏதுவாக அதிகளவில் சூரியசக்தி பம்புசெட்டுகள் நிறுவ வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை செயல்விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தியை உயர்த்த வேண்டும்.
தமிழக மக்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் அரசு தாவரவியல் பூங்காக்களை நன்கு பராமரிக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும். விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கு ஏதுவாக சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், ஏற்கனவே தொடங்கப்பட்ட அனைத்து உழவர் சந்தைகளும் நல்ல முறையில் இயங்கவும், இந்த நிதியாண்டில் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும், செயல்படாமல் இருக்கும் உழவர் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.