சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் குறித்து நிதி ஆயோக்கின் இரண்டாவது தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கேரளா முதலிடத்தையும், தமிழ்நாடு 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. முந்தைய ஆண்டு வெளியான பட்டியலில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் தற்போது மிகவும் பின்தங்கியுள்ளன.
இதுதொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சுகாதாரமான மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் ஒன்பதாவது இடத்திற்குச் சென்றிருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பைப் பார்க்கும் போது, நிர்வாகத் திறன் இல்லாத பழனிசாமி அரசாங்கத்தால் தமிழகத்திற்கு இன்னும் என்னென்ன தீமைகள் விளையப் போகிறது என்ற கவலை ஏற்படுகிறது. இனியாவது சுகாதாரத்துறையின் செயல்பாடுகளை சீர்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.