நாடு முழுவதும் கரோனா 2 ஆம் அலை அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழ்நாட்டிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களாக மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. கடை திறந்த முதல் நாளே வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட திருவொற்றியூர், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னை திருவொற்றியூர் அப்பர்சாமி கோயில் தெருவைச் சேர்ந்த கலைபிரியனின் மளிகை கடையில், பூட்டை உடைத்து ரூ.5000 பணம், மளிகை பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், சென்னை காசிமேடு காசிகார்டன் பகுதியை சேர்ந்த ஊர்காவல் படை வீரரான அந்தோணிதாஸ், பணி முடித்து வீடு திரும்பும்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அலைப்பேசி கேட்டுள்ளார். அதனை தரமறுத்ததால், கத்தியால் அந்தோணிதாஸை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து அந்தோணிதாஸ் கொடுத்த புகாரின் பேரில் காசிமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த யஷ்வந்த் என்பவர் வேலை முடித்து வீட்டிற்குச் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பணம் கேட்டு மிரட்டி கத்தியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து யஷ்வந்த அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே மோட்டார் சைக்கிளிலிருந்த நின்று கொண்டிருந்த 3 பேர், காவல் துறையினரை பார்த்தவுடன் தப்பிக்க முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த ஆனந்த் தப்பி ஓட முயன்றபோது காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின் அவரிடமிருந்து தொலைபேசி, கத்தி, கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பி ஓடிய நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!