இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீடித்த, அணுகத்தக்க, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய, கரோனாவுக்குப் பிந்தைய உலகை மீண்டும் சிறப்பாக கட்டமைக்க வேண்டுமென்ற கருப்பொருளுடன் 2020 உலக தினத்தை அணுசரிக்குமாறு உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டது வரவேற்கத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளை அவர்களது குடும்பத்தினரே சுமையாக கருதும் நிலையில், இவர்களுக்குப் பாதுகாப்பாக மொத்த சமூகமும் மத்திய, மாநில அரசுகளும் கடமையாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால், நமது அரசுகள் இக்கடமையினைத் தட்டிக்கழித்துவருவது வேதனையளிப்பதாகும். வேலைசெய்ய தகுதிப்படைத்த மாற்றுத்திறனாளிகளை 63.7 விழுக்காட்டினர் வேலையின்றி வாடுகின்றனர். எஞ்சியவர்களும் அத்துக்கூலிகளாகவும் அன்றாடக்காய்ச்சிகளாகவும் உள்ளனர்.
இயல்பாகவே நோய் எதிர்ப்புத்திறன் குறைவு உள்ள மாற்றுத் திறனாளிகள் எளிதில் கரோனா தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதால் இவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து உணவுகள் வழங்கிட வேண்டுமென ஐ.நா. பொதுச்செயலாளரின் வேண்டுகோளைக்கூட மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. வாழ வழியின்றி மாற்றுத் திறனாளிகளும், அவர்தம் பெற்றோர்களும் தற்கொலையில் மடிந்துபோன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கரோனா காலத்தில் பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகைகளாக வாரி வழங்கிய பாஜக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வெறுமனே ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து அதையும் சுமார் 3.5 விழுக்காட்டினருக்கு மட்டும் வழங்கிவிட்டு, கோடிக்கணக்கான மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றியுள்ளது.
அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதால் சமூக நீதி அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய நான்கு விழுக்காடு பணிவாய்ப்புகள் தற்போது குறைந்துவருகின்றன.
தனியார் துறை பணிகளில் குறைந்தபட்சம் ஐந்து விழுக்காடு பணிகளை வழங்க வேண்டுமென்ற மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட சரத்துகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தாத நிலையில் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.
பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கண்டறிந்து உடனடியாக நிரப்ப வேண்டுமென்று 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது.
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் மாத உதவித்தொகை மூன்றாயிரம் ரூபாய் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிடவும், சமூகத்தில் கவுரவமான பாதுகாப்பான வாழ்க்கை உத்தரவாதத்தினைப் பெற்றிட மாற்றுத் திறனாளிகள் நடத்தும் அனைத்துப் போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சொத்து குவிப்பு வழக்கு; ஜனவரி 27 விடுதலையாகிறார் சசிகலா?