இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் தொடர்ந்து சட்ட வரம்புகளை மீறி செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே 18 எம்எல்ஏ-க்களை பதவி நீக்கம் செய்தது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யத் தவறியது போன்ற பிரச்சனைகளில் சட்டவிதிகளுக்கு முரணாக எடப்பாடி, மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் நோக்கோடு அவர் செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்ட பின்னரும், தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் தற்போது 3 எம்எல்ஏ-க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
சட்டமன்றத்திற்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை பேரவைத்தலைவர் கேள்வி எழுப்புவதற்கும் சட்டவிதிகளில் இடமில்லை. இத்தகைய தெளிவான வழிகாட்டுதல்களை மீறி 3 எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத்தலைவர் நோட்டிஸ் அளித்தது சட்ட விரோதமானதாகும். இது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் அதற்கான இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் பேரவைத்தலைவர் விளக்கமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிதிகளை மீறி எடப்பாடி அரசை காப்பாற்றும் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்ட பேரவைத்தலைவர் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். பேரவைத்தலைவரின் செயல்பாடு சட்டமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவதோடு, சட்டப் பேரவையின் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும் வலியுறுத்துப்பட்டுள்ளது.