சென்னை: ஓர் ஆண்டிற்கு மேலாக உழவர்கள், ஒன்றிய அரசு (Union Government) கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் (Farm Laws) எதிர்த்துப் போராடிவந்தனர். இந்த நிலையில் இன்று (நவம்பர் 19) காலை பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் முடிவு முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கே. பாலகிருஷ்ணன், சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, "வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஓராண்டுற்கு மேலாக நடைபெற்றது. உழவரின் போராட்டத்திற்கு மோடி அரசு அடிபணிந்துள்ளது, உழவருக்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தில் உயிரிழந்த உழவருக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். போராட்டத்தின் வெற்றி கார்ப்பரேட்களுக்கு கிடைத்த மரண அடி.
மோடிக்கு அடுத்து ஆதரித்தது ஈபிஎஸ், ஓபிஎஸ்
திமுக அரசு (DMK Government) வேளாண் சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளுக்குப் புரிய வைக்க முடியவில்லை என மோடி கூறியது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்றதாகும்.
இப்போதும் இந்தச் சட்டத்தின் தீமைகள் பிரதமர் மோடிக்குப் புரியவில்லையே என்பது வருத்தமளிக்கிறது. வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றதன் மூலம் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக (BJP) வெற்றிபெற முடியாது.
மோடிக்கு அடுத்து வேளாண் சட்டத்தை இந்தியாவிலேயே அதிகமாக ஆதரித்தது பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்தான். தமிழ்நாட்டில் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாகப் பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு முழுக்க முழுக்க அனுபவித்துக்கொண்டு மாநில அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்துவது கபட நாடகம்.
பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் மோடி அரசு உழவரின் கடனைத் தள்ளுபடி செய்யாதது ஏன்? தேர்தலுக்கு முன்னரே தோற்றுப் போயுள்ளோம் என்ற மோடி எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தச் சட்டத்தைப் பின்வாங்கும் அறிவிப்பு" என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்கள் வாபஸ்: 'பிரதமருக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது'