சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா இன்று காலமானார். இன்று காலை 9.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் குரேம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் சென்று, அதன் பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இவரது மறைவு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா (102) வயது மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.
அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது. இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவ.16) காலை 10 மணியளவில், மார்க்சிஸ்ட் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும். கட்சியின் அனைத்து கிளைகளும், கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், ஒரு வார காலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்து துக்கம் கடைப்பிடிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த என்.சங்கரய்யாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, அவரது உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தகைசால் தமிழர் – முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது.
சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யார் இந்த குரூஸ் பர்ணாந்து? தூத்துக்குடி நகரத் தந்தைக்கு இன்று மணிமண்டபம் திறப்பு!