சென்னையில் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறி, பழங்கள், இதர பொருள்களை விற்பனைசெய்யும் ஒரு லட்சத்து 124 விற்பனையாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையில் கரோனா நோய் தடுப்புப் பணிகளின் நிலை, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்து வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு துறை சார்ந்த அலுவலர்களிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள்தோறும் சென்று தொற்று அறிகுறி உள்ள நபர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
சென்னையில் தற்போதுவரை 53 ஆயிரத்து 495 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றில் 27.45 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போதுவரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 29 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 641 ( 91 %) நபர்கள் குணமடைந்துள்ளனர்.
தற்போது 11 ஆயிரத்து 193 நபர்கள் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். செப். 29 வரை 14 லட்சத்து 13 ஆயிரத்து 469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட, சோதிக்கப்பட்ட மாதிரிகள் ஏழு லட்சத்து எட்டாயிரத்து 891. இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 23 ஆகும். நாட்டிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநகராட்சி பெருநகர சென்னைதான் உள்ளது.
சென்னையில் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறி, பழங்கள், இதர பொருள்களை விற்பனை செய்யும் ஒரு லட்சத்து 124 விற்பனையாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தினமும் சந்தைகளுக்கு வருகைதரும் பொதுமக்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.
பெருநகர சென்னை மாநரகாட்சிப் பகுதியில் பொதுமுடக்கத்துக்குப் பிறகு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் செயல்படுகின்றன. மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன.
அங்கு கண்டிப்பாக முகக்கவசம் அணியவும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், அனைத்து அலுவலங்களில் கைகழுவும் இயந்திரம், கைசுத்திகரிப்பான், சோப்பு போன்றவற்றைப் பயன்படுத்தவும் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னையில் தற்போது வழங்கப்படும் குடிநீர் நிலவரம், அடைப்புகள் உள்ள குழாய்களை புதுப்பிக்கும் நடவடிக்கை, 150 எம்எல்டி மற்றும் 400 எம்எல்டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் தற்போதைய குடிநீர் வழங்கும் நிலை, ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகள், 2020-21 ஆண்டின் புதிய திட்டங்களின் நிலை, பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நிலை மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பணிகளின் விவரம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிகழ்ந்த குற்றப் புள்ளி விவரம் - ஓர் விரிவான அலசல்