தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், மே.7 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அன்றைய தினம் கரோனா நிவாரண திட்டம், பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் என, அதிரடியாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பலரும் முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடியே, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். முதல் தவணையாக ரூபாய் 2,000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அரசாணையில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், சர்க்கரை கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு நிவாரண நிதி கிடையாது என்று, தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு கார்டுகளை விரைவாக வழங்கவும் அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.