'சித்த மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்ததாகக் கூறினாலே அரசு சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன்?' - Covid-19 vaccines, Prejudices of siddha medicine, HC lambasted
சென்னை: சித்த மருத்துவர்கள் யாரேனும் கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன், என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
கரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பிய குற்றத்திற்காக, சித்த மருத்துவர் தணிகாசலம் கைதுசெய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் கிருபாகரன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கான காரணம் என்ன, என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர் தன்னிடம் கரோனா தொற்றுக்கு மருந்து உள்ளது என தெரிவிக்கும்போது, அதைப் பரிசோதிப்பதை விடுத்து, ஏன் அவரைக் கைது செய்ய வேண்டுமெனவும் கேள்வி எழுப்பினர். மேலும், "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"' என்ற குறளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினாலே சந்தேகப்படும் சூழல் நிலவுவதாகக் கவலை தெரிவித்தனர்.
60 ஆண்டுகளாக சித்த மருத்துவராக உள்ள டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்ததாக ஆரம்பத்திலேயே தமிழ்நாடு அரசிடம் தெரிவித்தும், அது புறக்கணிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அவர் நாடியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தற்போது அந்த மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர்.
ஆரம்பத்திலேயே அவரது மருந்தை அரசு பரிசீலனை செய்திருந்தால், இந்நேரம் அந்த மருந்து கூட வெளிவந்திருக்கும் என தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், அதனைப் பரிசோதித்ததில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதாகத் தெரியவந்துள்ளது, அவற்றில் எத்தனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன, அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா ஆகிய கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர்.
நம்நாட்டு மருத்துவர்களுக்கு போதிய கட்டமைப்பையும், உரிய பண உதவியும் செய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை வழக்கில் இணைத்ததோடு, நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...தனியார் கல்லூரியில் மூன்று தவணையில் கட்டணம் வசூலிக்க அனுமதி!