சென்னை: கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவருக்கும் வயதின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி என்ற முறையில் செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் மார்ச் 14ஆம் தேதி வரை 10 கோடியே 17 லட்சத்து 20 ஆயிரத்து 580 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் முதல் தவணை தடுப்பூசி 5 கோடியே 33 லட்சத்து 8 ஆயிரத்து 622 நபர்களுக்கும், இரண்டாம் தவணைத் தடுப்பூசி 4 கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 914 நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
அதேபோல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 18 லட்சத்து 67 ஆயிரத்து 576 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 3 ஆயிரத்து 293 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
கோர்பேவேக்ஸ் தடுப்பூசி
இதையடுத்து ஒன்றிய அரசு 12 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை (மார்ச் 16) முதல் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "12 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதில் சுமார் 31 லட்சம் மாணவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு 'கோர்பேவேக்ஸ் தடுப்பூசி' செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 21 லட்சம் கோர்பேவேக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. சுகாதாரத்துறை மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, தனியார் பள்ளிகள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை விரிவுபடுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் இன்டெர்னெட் சேவை கொண்ட மாநிலங்கள்... யார் டாப், யார் மோசம்?