சென்னை: Covid 19 restrictions: தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து, நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் மற்றும் விமானம் மூலம் வெளியூர் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஊரடங்கின்போது ரயில் நிலையம், விமான நிலையம் செல்ல ஆட்டோ மற்றும் டாக்ஸியைப் பயன்படுத்தும்போது முன்பதிவு டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளை ரயில் நிலையம், விமான நிலையம் அழைத்துச்செல்லும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், பயணிகளிடம் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் டிக்கெட்டை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பயணிகளை ரயில் நிலையம், விமான நிலையத்தில் இறக்கி விட்டுத்திரும்பும் போது, காவல் துறை வாகனத்தணிக்கையின்போது காண்பிக்க வேண்டும்.
காவல் துறையினர் அந்த டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் தேதி, நேரம் மற்றும் வழித்தடங்களை ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர் ஆட்டோ, டாக்ஸி செல்ல அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியத் தேவை இன்றி அல்லது போலியான டிக்கெட்டை வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை பறிமுதல் முதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குக் கரோனா பூஸ்டர் டோஸ் - நாளை முதல் தொடக்கம்