பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக Corona Monitoring என்ற செயலி (App) தொடங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கரோனா என்ற இணைப்பின் வழியே பதிவிறக்கம் செய்தும், கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்தும் தங்கள் கைபேசியில் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.
இதுவரை ஒரு லட்சம் நபர்கள் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இச்செயலியின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், தங்கள் இருப்பிடங்களிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து இதில் பதிவேற்றம் செய்தால், அவர்கள் இருக்கும் முகவரி மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் சேகரித்து வைத்துக்கொள்ளப்படும்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் செயலியில் உள்ள அதற்கான இணைப்பில் புகைப்படம் எடுத்து அனுப்பினால், அவர்களுடைய தகவல்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் சேகரிக்கப்படும். இதன்மூலம் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள பகுதிகள் உடனடியாக அறிந்துகொண்டு அப்பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சிக்கு எளிதாக இருக்கும்.
இதுவரை 623 நபர்கள் இந்தச் செயலி மூலம் வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக தொடர்புகொண்டு தங்களுக்கு உள்ள அறிகுறிகளை தெரிவித்துள்ளனர். அதன்படி, மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில் இவர்களில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை எனவும், சாதாரண சளி, காய்ச்சல் மட்டுமே உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக இந்தச் செயலியைப் பயன்படுத்தி தெரிவிக்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் தள்ளுவண்டி கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை