தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
இதையடுத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்திலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் 16 பார்சல்களில், 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் இன்று (மே.04) சென்னை கொண்டு வரப்பட்டன.
அதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். அதுபோல் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னைக்கு வர உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.