ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத் துறையினருக்கும், அதனைத் தொடர்ந்து முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை 50 லட்சத்து 23 ஆயிரத்து 154 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் விரைந்து அனுப்ப வேண்டுமென மத்திய அரசிற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை கடிதம் அனுப்பியது.
அதன்பேரில், 6 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு 20ஆம் தேதி அனுப்பியது. இன்று(ஏப்.23) மேலும் 2 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது 4,998 மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 3,995 இடங்களிலும், தனியார் மருத்துவமனைகளில் 1,003 இடங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சென்னையில் 362 அரசு மருத்துவமனைகள், 260 தனியார் மருத்துவமனைகள் என, மொத்தம் 622 இடங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
மாநிலத்தில் முதல் தவணை தடுப்பூசி 42 லட்சத்து 47 ஆயிரத்து 113 பேருக்கும், 2ஆம் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 15 ஆயிரத்து 610 பேருக்கும் என, 50 லட்சத்து 89 ஆயிரத்து 723 பேருக்குப் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடப்பட்ட விபரங்கள் https://dashboard.cowin.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலத்தில் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வமாகச் சென்றாலும், அங்குள்ள மையங்களில் தடுப்பூசி இல்லை எனத் திருப்பி அனுப்புகின்றனர்.
சென்னையில் கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 2ஆவது தவணை செலுத்துவதற்குத் தடுப்பூசிகள் இல்லாத நிலை உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், "தமிழ்நாட்டிற்குக் குறைந்த அளவிலேயே கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கோவாக்சின் தடுப்பூசி வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
வரும் மே ஒன்றாம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு - கருத்துக்கேட்பு கூட்டத்தால் பரபரப்பான ஆட்சியர் வளாகம்