சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாநாடு'. இதில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது.
இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடுவதாக திட்டமிடப்பட்டு, பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மாநாடு சாட்டிலைட் வெளியீட்டு உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்யும் முயற்சியை எதிர்த்து, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில், "திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். கொட்டும் மழையிலும் இரவு, பகல் பாராமல் படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்தோம். பைனான்சியர் உத்தம்சந்திடம், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக ரூ. 5 கோடியை நானும், என் மனைவியும் உத்தரவாதம் செலுத்தினோம்.
இந்நிலையில் எங்களிடம் தெரிவிக்காமலேயே படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்க முயற்சிகள் நடக்கின்றன. எங்களுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்கும் வரையிலும் சாட்டிலைட் உரிமையை இறுதிசெய்ய தடைவிதிக்க வேண்டும். அத்துடன் பணத்தைத் தர உத்தரம்சந்த், சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 11) நீதிபதி எஸ்.ஜீவபாண்டியன் முன்பு விசாரணைக்கு வந்தது. டி.ராஜேந்தர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே சிம்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிம்பு மருத்துவமனையில் அனுமதி; சோகத்தில் ரசிகர்கள்