சென்னை: பிரபல யூடியூபரான (Youtuber) டிடிஎஃப் வாசனுக்கு ஏற்கனவே இரண்டு முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு தற்போது அது முடிவடைந்த நிலையில், இன்று (அக்.16) காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் வீடியோ கான்ஃபரன்ஸ் (Video Conference) மூலம் டிடிஎஃப் வாசன் ஆஜரானார்.
அப்போது, மூன்றாவது முறையாக மேலும் 15 நாட்கள் என, அக்டோபர் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவிட்டார். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்குச் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தனது நண்பருடன் செல்லும் போது, ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டும், வீலிங் சாகசத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் டிடிஎஃப் வாசன் பைக் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவரது பைக் விபத்துக்கு உள்ளாகி, அவருக்கு கை முறிவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், டிடிஎஃப் வாசன் விபத்துக்கு உள்ளாகிய சிசிடிவி காட்சியும், அதேபோல் வீலிங் சாகசத்தில் மற்றொரு இடத்தில் ஈடுபட்ட காட்சியும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மீது ஐந்து பிரிவுகளில் பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீதான ஜாமீன் மனுவானது, இதுவரை நான்கு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இரண்டு முறை நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.
அதேபோல் அவரது வாகன உரிமம் ஆனது பத்து ஆண்டுகள் வரை ரத்து செய்து காஞ்சிபுரம் போக்குவரத்து வட்டார அலுவலர் தினகரன் அதிரடி உத்தரவினை பிறப்பித்திருந்தார். தற்போது, டிடிஎஃப் வாசனின் இரண்டாவது முறையான நீதிமன்ற காவல் நீடிப்பானது இன்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் இன்று டிடிஎஃப் வாசன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1ல், நீதிபதி இனிய கருணாகரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மீண்டும் மூன்றாவது முறையாக 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து, அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி வரை டிடிஎஃப் வாசனை சிறையில் அடைக்க நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: பிரசவத்திற்கு பிறகு மூன்று தாய்மார்கள் உயிரிழப்பு; தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் மருத்துவமனையில் ஆய்வு