சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்குத்தடை விதிக்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்றத்தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என அதிருப்தி தெரிவித்த தனி நீதிபதி, ஜூலை 11 உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் செயல்பாடு உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், 'தீர்ப்பில் தவறு இருந்தால் மேல் முறையீடு செய்திருக்கலாம், தீர்ப்பில் திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம்' என வேதனைத் தெரிவித்த நீதிபதி வழக்கை நாளை (ஆகஸ்ட் 05) ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சஞ்சய் ராவத்திற்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!