சென்னை தாம்பரம் அடுத்த மதுரவாயல் புறவழிச்சாலை அனகாபுத்தூர் அருகே திருப்போரூரிலிருந்து கோயம்பேடு நோக்கி கொரியர் பார்சல்களை ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திடீரென புகை வர தொடங்கியுள்ளது.
உடனடியாக, வாகன ஓட்டுநர் சண்முகம் வாகனத்தை புறவழி சாலையின் பக்கவாட்டில் நிறுத்திவிட்டு இறங்கி வந்துவிட்டார். சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி மளமளவென எரிய தொடங்கியது. இதில் பார்சல் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
தகவலறிந்து தாம்பரம், மதுரவாயல், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளன. இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.