தேனாம்பேட்டையில் உள்ள கார் ஷோரூம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று மாலை நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் இச்சம்பவத்தை நிகழ்த்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர். சம்பவ இடத்தில், அமெரிக்க தூதரகம், பள்ளிவாசல் உள்ளிட்ட பிரதான இடங்கள் அமைந்துள்ளன. இதனால், மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்களும் அப்பகுதியில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையில், தேனாம்பேட்டை காவல்துறையினர் அருகே உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த சிசிடிவி காட்சிகளிலுள்ள இருசக்கர வாகன எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டபோது, சென்னை மாம்பலம் ராஜாபிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவரின் இருசக்கர வாகனம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில், தேவதாஸிடம் விசாரித்தபோது, கல்லூரியில் பி.ஏ 2ஆம் ஆண்டு படிக்கும் தனது மகன் மகேஷ் வாகனத்தை எடுத்து சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த வாகனத்தில் மகேஷ், அவரது நண்பர் அஜித் சென்றதாகக் கூறப்படுகிறது. தற்போது, மகேஷ் செய்யாறு பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் இருப்பதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை காவல்துறை செய்யாறு பகுதிக்கு விரைந்துள்ளனர். மகேஷை விசாரித்தால்தான், எதற்காக வெடிகுண்டு வீசினார், யார் மீது வீச முயற்சி செய்தார் என்பது குறித்து தெரியவரும்.
இந்த சம்பவம் தொடர்பாக, தேவதாஸ் உட்பட 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, சம்பவம் நடந்த இடத்தின் வழியாக பிரபல ரவுடிகள் காரில் சென்றதும் தெரியவந்துள்ளது. ஆகையால், இந்த குண்டு வெடிப்பு சம்பவம், ரவுடிகளுக்கு இடையில் இருந்த மோதல் காரணமாக நடைபெற்றதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, தனியார் நிறுவன உரிமையாளர் கபார் கான் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை, புறநகரில் மூன்று தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய இருவரையும் இன்று மாலைக்குள் பிடிப்பதாகத் தனிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: