சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாகவும் நடைபெறவுள்ள தேர்தலில் திமுக, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு பங்கீடு தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறுகையில், “புத்தாண்டுக்குப் பின்னர் முதல்வரைச் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட அளவில் ஆங்காங்கே திமுக மாவட்டச் செயலாளர்கள் உடன் கூட்டணிக் கட்சி சார்பில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது.
விசிக சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் கட்சிக்குத் தேவையான தொகுதிகளை திமுக மாவட்டச் செயலாளர்களுடன் சமர்ப்பித்து இரண்டு மூன்று நாள்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விசிகவிற்கு தலைவர் பதவிகள் ஒதுக்கக் கோரிக்கை
இது குறித்து முதலமைச்சர் இடத்தில் விசிகவிற்க்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி, பேரூராட்சி நகராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை விசிகவிற்கு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது.
அகில இந்திய அளவில் சமூக நீதியைப் பாதுகாப்பதற்கான கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக முதல்வர் அறிவித்தார், அது வரவேற்கக் கூடியது. சமூகநீதியைப் பாதுகாப்பதன் தேவையை உணர்ந்து முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
லாவண்யா மாணவி தற்கொலை விவகாரத்தில் மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களின் முயற்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போற்றுதலுக்குரியது. இதனை வரவேற்கிறோம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளோம். ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தது ஆணவத்தின் உச்சம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கட்சி ஏதுவாக இருந்தாலும், கடுமையான அரசியல் முரண்கள் இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் ஒவ்வொருவர் சந்தித்துக் கொள்ளும் முதிர்ச்சியான நிகழ்வுகள் மற்ற மாநிலங்களில் உள்ளது. தமிழ்நாட்டிலும் அந்தக் கலாச்சாரம் வளர வேண்டும். அந்த வகையில் நவநீத கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:அண்ணா பிறந்தநாள் கைதிகள் விடுதலையில் பாரபட்சம் - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு