சென்னை: மீன்வளம் மற்றும் கால்நடை துறை மீதான மானியக் கோரிக்கையின் போது உடுமலை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த ஆட்சி காலத்தில் கால்நடை துறையில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு கால்நடை மற்றும் மீன்வளதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து பேசுகையில், “தமிழ்நாட்டில் கால்நடைகளை பெருக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதிலும் ஊழலா?
இதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து கறவை மாடுகள் வாங்கப்பட்டன. நேரடியாக பயனாளிகளை அழைத்துச் சென்று மற்ற மாநிலங்களில் கறவை பசுவை வாங்கி இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஆட்சியில் அவ்வாறு செய்யவில்லை. இதன் காரணமாக தரமற்ற கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் கடந்த ஆட்சியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
அதிமுக ஆட்சியில் பல்வேறு கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் கட்டப்பட்டதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவிக்கின்றார்.
ஆனால் 1979 ஆம் ஆண்டில் கால்நடை ஆராய்ச்சிகளை விரிவுப்படுத்தும் வகையில் தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை கொண்டுவந்து, கால்நடை வளர்ச்சிக்கு வித்திட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்று மாதங்களில் பிரஸ் கவுன்சில் -தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு