சேலம்: கரோனா நிவாரண நிதியில் ஊழல் நடந்துள்ளதாக, ஓமலூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்றின் முதலாவது அலை பரவிய நேரத்தில், பஞ்சாயத்து ஒன்றியம் சார்பில், கரோனா நிவாரண நிதியில் இருந்து கிருமிநாசினி, முகக்கவசம் மற்றும் கையுறைகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கரோனா நிவாரண நிதியில் ஊழல்
லிட்டருக்கு 76 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட கிருமினாசினி, 280 ரூபாய்க்கு 5,000 லிட்டர் வாங்கியுள்ளதாகவும்; 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக்கவசங்களை 220 ரூபாய்க்கும், 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட கையுறைகளை 180 ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மொத்தமாக, 11 லட்சத்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு இப்பொருட்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, தனது ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் மற்றும் சேலம் ஆட்சியருக்கு புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கரோனா நிவாரண நிதியில் நடந்த இந்த ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
தலைமை செயலாளருக்கு உத்தரவு
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யும்பட்சத்தில் இந்த புகார் தொடர்பாக தணிக்கை செய்ய ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.
மேலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் டெபாசிட் தொகையை மனுதாரருக்கு திருப்பி அளிக்கலாம் எனவும், முறைகேடுகள் நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அது சம்பந்தமாக தலைமைச் செயலாளருக்கு அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: இலங்கையில் கேட்பாரற்றுக் கிடக்கும் தமிழ்நாடு மீனவர்களின் படகுகள்..!