சென்னை: 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் குலாம் தஸ்தகீர் கூறும்போது, "தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைத்துத்துறைப் பள்ளிகளையும் இணைத்துள்ளது என்பது பள்ளிக்கல்வித் துறையை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால் அதனை வரவேற்கிறோம். இது மாணவர்கள், ஆசிரியர்கள் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், மாநகராட்சிப் பள்ளிகள் தனி அலகாக இன்னும் தொடர்கிறது. எனவே அதனையும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இணைத்தால் கற்றல் கற்பித்தல் பணிகள் இன்னும் நன்றாக இருக்கும்.
ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு பணி வழங்கப்படுகிறது. இவர்கள் பணிக்காக மாநகராட்சிக்கு பள்ளியில் சேர்ந்தால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மன அமைதி இல்லாமல் தொடர்ந்து சொந்தங்களை விட்டு விலகி பணியாற்றிட வேண்டும். ஆனால், பள்ளிக்கல்வித்துறையில் பணியில் சேர்பவர்கள் பணியிட மாறுதல் பெற்று சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும்.
மாநகராட்சிப் பள்ளிகளை உள்ளாட்சித்துறை நடத்தினாலும், இரண்டாம், மூன்றாம் தரமாகத்தான் அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். அதுவே, பள்ளிக்கல்வித்துறைக்கு கீழ் வந்தால் அனைத்து திட்டங்களும் உடனே செய்து தரப்படும். பள்ளிக் கல்வித்துறையால் அளிக்கப்படும் அனைத்து திட்டங்களும் மாநகராட்சி பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை. நகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே எந்த வசதிகளும் கிடைக்கும்.
ஆனால், மாநகராட்சிப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறைக்கு கொண்டு வரும்போது அனைத்து திட்டங்களையும் எளிதாக கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் உள்ள சுமார் 500 மாநகராட்சி பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையில் இணைக்க வேண்டும். ஏற்கனவே நிதிச் செலவுகளை அரசுதான் செய்கிறது. மாநகராட்சி பள்ளிகளை இணைப்பதால் அரசிற்கு நிர்வாக செலவு மிச்சமாகும்" என்று கூறினார்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவர் மணிவண்ணன் கூறும்போது, "பிற துறைகளில் இயங்கும் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இணைப்பதை வரவேற்கிறோம். சென்னைப் பள்ளிகளையும் அரசுத்துறையின் கீழ் இணைக்க வேண்டும். எங்களுக்கு சம்பளம், ஓய்வூதியம், மாணவர்களுக்கான கல்வித்திட்டம் என அனைத்தும் அரசால் வழங்கப்படுகிறது, ஆனால் நிர்வாகம் மட்டும் மாநகராட்சியில் உள்ளது.
இதனால், மாநராட்சிப் பள்ளிகளுக்கு அரசால் ஒதுக்கப்படும் திட்டங்கள் தாமதமாக வருகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியில் சேர்க்கப்பட்டாலும் சொந்த ஊர்களுக்கு பணியிட மாற்றம் செல்வதில் பிரச்சனை உள்ளது. எனவே, மாநகராட்சிப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.
பள்ளிகளை இணைக்கும் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அறநிலையத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிகள் எல்லாம் பக்தர்களின் நன்கொடைகளை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட பள்ளிகள்.
பல்வேறு பள்ளிகளின் வளாகத்தில் கோவில்களும், சில கோவில்களின் வளாகத்தில் பள்ளிகளும் இயங்குகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் பள்ளிகளை எல்லாம் அரசு பள்ளிகளாக மாற்றம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. ஆகவே, இது போன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட, ஆலயங்களை முடக்கும் முயற்சிகளை தமிழக முதல்வர் கைவிட வேண்டும். ஆலயங்கள் நடத்தும் கல்விக்கூடங்களை அரசுடமையாக்ககூடாது" என்று தெரிவித்துள்ளார்.