சென்னை: கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள மாநகராட்சி நான்காயிரத்து 903 ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பெற்றுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட பலர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் அப்போது ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்க தொடங்கியது. பலருக்கு ஆக்சிஜன் வசதி கிடைக்காத சூழல் நிலவியது. இதனைச் சமாளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அவசர சிகிச்சை (zero delay) பிரிவு உருவாக்கப்பட்டு, அதில் மூச்சுத்திணறல் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, கரோனா சிகிச்சை மையம் (CCC) உள்ளிட்ட கரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை சந்தைகளில் விலைக்கும், நன்கொடையாகவும் பெற்று தேவையைப் பூர்த்தி செய்துவந்தது. அந்தவகையில், மாநகராட்சி சார்பாக இரண்டாயிரத்து 705 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சந்தைகளில் விலைக்கு வங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இதுவரை மாநகராட்சிக்கு, சென்னை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் நன்கொடையாக இரண்டாயிரத்து 198 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டுள்ளன.
இதில், சென்னையில் உள்ள மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், கரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட மையங்களுக்கு இரண்டாயிரத்து 990 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்கள் சென்னை மாநகராட்சி ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிட வேண்டிக் கோரிக்கைவைத்தன.
அதனடிப்படையில், அதிகபட்சமாக கோவைக்கு 569 செறிவூட்டிகள், ஈரோடு மாவட்டத்திற்கு 319 செறிவூட்டிகள் என இதுவரை ஆயிரத்து 633 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சி சார்பில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது.
தொற்று பரவல் தற்போது குறைந்துள்ள காரணத்தால் பயன்படுத்தப்படாத 168 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி கைவசம் உள்ளது.
இதையும் படிங்க: 'பணம் இல்லை.. பலம் இருக்கிறது..' - மகனை நம்பி பணியைத் தொடங்கிய விவசாயி