சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ:21) மாலை 20 பேருக்கு மேற்பட்டவர்களை தெருநாய் கடித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர். இந்த சம்பத்தில் காயமடைந்த பலரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாய்க்கடிக்கான சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இறந்த நாயின் உடலை மீட்ட சென்னை மாநகராட்சி, உடற்கூராய்விற்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தததில் அந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாய் கடித்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கும் 5 டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் 50 நாய்களைப் பிடித்து கருத்தடை செய்திவருகிறோம். இதில் குறிப்பாக ராயபுரம் பகுதியில், 31 நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், “சென்னையில் தொடர்ந்து தெரு நாய்கள் கண்காணிப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களில் 50 நாய்களைப் பிடித்து கருத்தடை செய்துள்ளோம். இதில் குறிப்பாக ராயபுரம் பகுதியில், 31 நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, தொடர்ந்து கண்காணிக்கபடுகிறது.
இந்த ராயபுரம் பகுதியில் பிடித்த நாய்களை மட்டும் தனிமைப்படுத்தி இருக்கிறோம். மேலும், அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்டவர்களை கடித்த நாயை அந்த பகுதிவாசிகள் அடித்து கொன்றுள்ளனர். அந்த இறந்த நாய்க்கு உடற்கூராய்வு செய்ததில் ரேபிஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், இந்தாண்டில் இதுவரை 17 ஆயிரத்து 813 நாய்களை பிடித்து "ரேபிஸ்" தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 13 ஆயிரம் நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாய்களை பிடித்த இடத்திலே மீண்டும் விடப்படுள்ளது. தற்போது, ராயபுரம் பகுதியில், இதர நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறன.
ஒருவேளை நாய் நம்மை கடித்து விட்டால், உடனடியாக நாய் கடித்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். அது தடுப்பூசி செலுத்தபட்ட நாயாகவே இருந்தாலும் முறையான மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். தற்போது பொதுமக்களை கடித்த நாய்-க்கு ரேபிஸ் இருப்பதால், ஏற்கனவே நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மொத்தம் 5-டோஸ் போட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவர்கள் கூறுகையில், “நாய் கடித்தவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
மேலும், தெரு நாய் கடித்ததில் அவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி 5 டோஸ் போட வேண்டியிருக்கும். முதல் 2-டோஸ்கள் செலுத்தபட்டுள்ளன. மீதம் இருக்கும் தடுப்பூசி செலுத்தும் நாட்களை நாங்கள் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம். மேலும், அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்” எனத் தெரித்தனர்.
நாய்கள் பிரச்சனைக்கு தீர்வு: நாய்கள் கருத்தடை தொடர்பாக ப்ளூ கிராஸ் அமைப்பினர் கூறுவது, “சென்னை போன்ற பெரிய நகரத்தில் நாய்கள் அதிகரித்து வருகிறன. இதனை தடுக்க கருத்தடை ஒன்றே தான் தீர்வு. இந்த கருத்தடை என்பது, தொடர்ந்து நடக்க வேண்டும். சென்னையில் இருக்கும் நாய்களின் எண்ணிக்கையில் பாதி நாய்கள் பெண் நாயாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும், ஒரு நாய் என்பது, 5 முதல் 6 குட்டிகள் ஈன்று விடும். மேலும் கருத்தடை என்பது, தொடர்ந்து ஒரு ஆண்டுகளில் 75% நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டுமே சென்னையில் நாய்களின் எண்ணிக்கையானது கட்டுக்குள் வரும்” எனத் தெரிவித்தனர்.