சென்னையில் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள், சிகிச்சை மையங்களை இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.
பின்னர் 'சாலிகிராமத்தில் பேட்டியளித்த ஆணையர் பிரகாஷ், "கரோனா தொற்று தொடர்பாக ஏற்கனவே, ஐ.சி.எம்.ஆர் தெரிவித்த விதிமுறைகள் படி 14 நாள்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு மீண்டும் பரிசோதனை ஏதும் செய்யாமல் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கரோனா தொற்று தடுப்பு மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் அடுத்த 14 நாள்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொற்று ஏற்பட்டு தங்களின் வீட்டில் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பின் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவிக்கிறோம். பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், மழை காலங்களில் கரோனா தொற்று வேகமாக பரவும் என்பதற்கு அதிகாரப்பூர்வ சான்றுகள் ஏதும் இதுவரை இல்லை என்பதால் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.
சித்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகள் பெற்று செயல்படுத்தப்படும் சிகிச்சைகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது" என்றார்.