தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கரோனா வைரஸ் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரியின் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினார்.
அப்போது பேசிய அவர், “ஏற்கனவே உள்ள வைரஸ் காய்ச்சல் போல் இதுவும் இருக்கும். ஆனால், இந்த வைரஸ் கிருமித் தொற்று ஏற்பட்டால் நேரடியாக நுரையீரலை சென்று தாக்கும்.
இந்தக் கிருமியானது ஏற்கனவே அந்த நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே பரவும். முக்கியமாக இரும்பல் மூலம் 20 விழுக்காடு மட்டுமே பரவ வாய்ப்புள்ளது.
கரோனா வைரஸ் 80 விழுக்காடு கைகளின் மூலம் பரவ வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பொது சுகாதாரத் துறை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி கைகளை சுத்தமாக கழுவி பராமரிக்க வேண்டும். பொது சுகாதாரத் துறை கைகளை கழுவுவதற்கு ஆறுவகையான முறைகளை தெரிவித்துள்ளது.
சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். அதேபோல் முகமூடிகளை( மாஸ்க்) அணியும் பொழுது நோய் பாதிப்புள்ளவர்கள் அதற்குரிய பில்டர்கள் உள்புறம் இருக்குமாறும், நோய் பாதிப்பு இல்லாதவர்கள் பில்டர்கள் வெளிப்புறம் இருக்குமாறு அணிய வேண்டும்.
நோய் பாதிப்பு இல்லாதவர்கள் பில்டர்களை உள்புறமாக அணிந்தால் நோயினை அவர்களே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழக அரசு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சீனாவிலிருந்தும் அந்த நோய் பரவியுள்ள நாடுகளிலிருந்தும் வருபவர்களை தீவிரமாக கண்காணித்து , சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனவே தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதல் வராது. அச்சம் கொள்ள வேண்டாம்” என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சீனிவாசன் கூறும்போது, “தமிழ்நாடு அரசு எவ்வித நோய் வந்தாலும் அதில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது. எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை. அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
வழக்கமாக வரும் வைரஸ் காய்ச்சல் போல் தான் இந்த கரோனா வைரஸ் காய்ச்சலும் வந்துள்ளது. இதற்கு யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த நோய் இந்தியாவில் இதுவரை கேரளாவில் இருவரைத் தவிர வேறு யாருக்கும் வரவில்லை.
இந்த நோய் அதிகமாக பரவுவதற்கு கை கொடுப்பது தான் காரணம். எனவே, நாம் பாரம்பரிய முறைப்படி வணக்கம் வைப்பது இதுபோன்ற காலங்களில் நல்லது. தொடர்ந்து கை கழுவுதல் மிகச்சிறந்த விழிப்புணர்வு.
மேலும், மாமிச உணவுகளை நன்கு வேகவைத்து அதன் பின்னர் உண்ண வேண்டும். கரோனா வைரஸ் பொருத்தவரை நமது தட்பவெப்ப சூழ்நிலையில் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
வைரஸ் 20 டிகிரி வெப்பத்துக்கு மேல் இருந்தால் வெளியில் வரும் போது இறந்து விடும். இன்னும் 10 அல்லது 20 நாட்களில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்போது கரோனா வைரஸ் குறித்த அச்சமே நமக்குத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் - சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து