சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஒருவர் கரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடலை அண்ணா நகரில் உள்ள வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய அவசர ஊர்தி மூலமாக அரசு ஊழியர்கள் கொண்டு சென்றனர். அப்போது காந்திநகர் கல்லறை அருகேயுள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 பேர் ஒன்று கூடி கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை இங்கு அடக்கம் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி, அவசர ஊர்தியின் கண்ணாடி மீது கல் எறிந்து உடைத்தும், ஓட்டுநர், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 7 பேரை சரமாரியாக தாக்கியும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவரின் உடலை மீண்டும் கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, பின்னர் இரவு 1 மணியளவில் காவல் துறையினர் பாதுகாப்போடு வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்தனர்
இந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களைத் தாக்கியதாக ஒரு பெண் உள்பட 14 பேரை காவல் துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 14 பேர் மீதும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதையும் பார்க்க: கரோனா உயிரிழப்பு - உடல்கள் தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என வேண்டுகோள்!