நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னையில் கரோனா வைரஸ் தொற்று இல்லாத இடங்களில் மட்டுமே பணிகள் செய்ய அனுமதிப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு, எப்படி கரோனா தொற்றுப் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ள போகின்றனர் என்பது இன்று முதல் தெரிய வரும். பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர)
- கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள், சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & EXPORTS UNITS) சென்னை மாநகராட்சி ஆணையர் / மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT & ITeS) 10 விழுக்காடு பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (e-commerce), ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
- உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.
- அனைத்து தனிக் கடைகள் (STANDALONE AND Neighborhood SHOPS) (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- பிளம்பர், எலெக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் (HOME CARE PROVIDERS), வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் / சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கதிர் அரிவாள் தயாரிப்பு தொழிலாளர்கள்