சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டை மூன்று பகுதிகளாக மாற்றுவதற்கு மாநகராட்சி அலுவலர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், வியாபாரிகள், தொழிலாளர்கள் செல்ல கடினமாக இருக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தி சந்தை செயல்பட்டது.
இந்நிலையில் கரோனா தொற்றின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து வருவதால், கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவதற்கு சி.எம்.டி.ஏ செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி அலுவலர்கள் முடிவு செய்தனர். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும், கரோனா தொற்றின் காரணமாக அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும் முடிவு செய்தனர். இதனால் 9 மாநகர பேருந்துகளில் சுமார் 530 நபர்களை தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரி, திருமங்கலத்தில் உள்ள சமுதாய நலக்கூடம், விருகம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரியலூரில் கோயம்பேடு சென்று வந்த 222 தொழிலாளர்களுக்குப் பரிசோதனை!