சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதித்து உயிரிழந்த நரம்பியல் வல்லுநர் சைமன் ஹெர்குலஸின், உடலைக் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முற்பட்டபோது சிலர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அது தொடர்பாக டி.பி. சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஷெனாய் நகரைச் சேர்ந்த செல்வி, சுதாகர், அந்தோணி ராஜ், மணிமாறன், நிலேஷ், பாக்கியம், டில்லிராஜ், சரவணன் ஆகிய எட்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதையடுத்து அவர்கள் பிணை கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை எழும்பூர் ஐந்தாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் முன்னிலையில் வாதிடப்பட்டது.
அதில் மனுதாரர்கள் தரப்பில், "தங்களுக்கு எதிராகப் பொய் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். நீதிமன்றம் விதிகளையும், நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்கிறோம்" என வாதிடப்பட்டது.
அதையடுத்து காவல் துறை தரப்பில், "வழக்கின் விசாரணை இன்னும் முடியவில்லை. அவர்களுக்குப் பிணை வழங்கினால் தலைமறைவாகவும், சாட்சிகளைக் கலைக்கவும் இடர் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் எட்டு பேருக்கும் பிணை வழங்கப்படுகிறது. வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளாக உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் என்பதால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பில்லை.
மேலும், அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்தப் பிணையை சிறைக் கண்காணிப்பாளரிடம் தாக்கல்செய்ய வேண்டும். நீதிமன்றம் திறந்த பின் 10 நாள்களில் முன்னிலையாகி, தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்தப் பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.
மேலும் சாட்சிகளைக் கலைக்கக் கூடாது எனவும், நீதிமன்றம் அழைக்கும்போது நேரில் முன்னிலையாக வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சலூன் கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை - அரசு உறுதி!