சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 118 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சி உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 1800 4250 111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த உதவி எண்கள் மூலம் பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு, அவர்களின் வீடு அல்லது வீட்டின் மிக அருகில் சென்று தடுப்பூசி செலுத்தச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது வரையிலும் உதவி எண்களின் வாயிலாக 169 நபர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை 118 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 90 நபர்களுக்குச் சிறப்பு முகாம்கள் மூலமாகவும், 28 நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.