கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதையடுத்து கரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்த அரசானது மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகார நிலையங்களை பயன்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பிற்கு அருகில் உள்ள அரசு கல்லூரியில் மருத்துவக் கட்டில்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால் கல்லூரியில் கரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதாக தகவல் பரவியது. அதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாசல் முன் நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த வடசென்னை துணை ஆணையர் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தயில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி கூட்டத்தை கலைத்து அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி!