கரோனா நோய் தொற்று காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் சிகிச்சை எடுக்க அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வகையில் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டது.
கரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்கென்று தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் மக்கள் நல்வாழ்வு துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததால் அம்மருத்துவமனை மீது சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், நோயாளி ஒருவருக்கு 18 நாள்களுக்கான சிகிச்சைக்கு 12.5 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதில் முன்பணம் ரூ. 2.5 லட்சம் போக மீதி கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. உறுதிசெய்யப்பட்ட நிலையில் அப்பாசாமி மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தி வருகிறது. தவறும்பட்சத்தில் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: தேசியக் கொடியை ஏற்ற தொடர் எதிர்ப்புகள்: தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் விசாரணை!