சென்னை குன்றத்தூரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலங்கள் மற்றும் திருமணங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம். இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சமீபத்தில் கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழியருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அலுவலகத்தை மூடாமல், வழக்கம்போல் இன்றைய தினம் பத்திரப் பதிவு நடைபெற்றது. இதனை அறியாமல் ஏராளமானோர் பத்திர பதிவு செய்ய டோக்கன்கள் வாங்கி, பணத்தையும் கட்டிவுள்ளனர்.
இதனையறிந்த பேரூராட்சி அலுவலர் வெங்கடேசன் தலைமையில் சென்ற ஊழியர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றி, கிருமி நாசினி தெளித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தை மூடி சீல் வைத்தனர்.
மேலும் இரண்டு நாள்களுக்கு பிறகு (ஆகஸ்ட் 6) பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஊழியருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலும் பத்திரப்பதிவு அலுவலகம் வழக்கம் போல் செயல்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.