சீனா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் நோய் பரவி உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் நுழைவு இசைவு (விசா) தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாகக் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளைக் கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆய்வுசெய்தார்.
அதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை விமான நிலையத்தில் சீனா உள்பட ஏழு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுவந்தனர். தற்போது இத்தாலி, கொரியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான நுழைவு இசைவுகளும் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மாவட்ட, கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடிக்க உலக சுகாதாரத் துறை உள்பட எல்லா நாடுகளும் தீவிரமாக உள்ளன” என்றார்.
இதையும் படிங்க: காஷ்மில் 21 பேருக்கு கொரோனா ?