சென்னை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையால் குறைந்தது. இறப்பு வீதமும் குறைந்தது.
ஆனால் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டில் நடத்தியதால், கரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் மாதமே தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
வைரஸ் தொற்று குறைந்த பின்னர் ஆறு மாதம் கழித்து சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தியிருக்கலாம். தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை மட்டுமே அழைத்து கருத்து கேட்டது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்டிருந்தால் தேர்தலை நடத்தக் கூடாது என தெரிவித்திருப்போம்.
தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை மீறி அரசியல் கட்சிகள் பரப்புரை செய்தன. இதனால் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது. தேர்தலில் கூட்டத்தை கூட்டுவதற்கு அரசியல் கட்சியினர் காசு கொடுத்து பொதுமக்களை அழைத்து வந்தனர். ஆனால் புதிய தமிழகம் கட்சி கரோனா விதிமுறைகளை பின்பற்றி பரப்புரை மேற்கொண்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை காங்கிரஸ் வேட்பாளர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் பரப்புரையில் ஈடுபட்ட மேலும் சில வேட்பாளர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கக் கூடாது. அவ்வாறு அறிவித்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடு மற்றும் மாதம் 15,000 சம்பளமும் அரசு வழங்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது" என்றார்.