சென்னை: கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் தொற்றுப்பரவலை எதிர்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கைகள் குறித்தும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதில் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், மருத்துவத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், நகர சுகாதார அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "கரோனா தொற்றின் பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 332 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று மேலும் பாதிப்பு அதிகரிக்கும். 5 மாவட்டங்களில் இரு இலக்கத்தில் பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த உதவி சுகாதார அலுவலர்கள், துணை ஆணையர்கள் உடன் ஆலோசனை நடத்தினோம். ஒவ்வொரு மண்டலத்திலும் ஏற்பட்டுவரும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் கண்காணிப்புகுறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ என்றார்.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவும் கரோனா: ”தமிழ்நாட்டில் 1622 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். சென்னையில் 781 பேர் சிகிச்சைப் பெறுகிறார்கள். 59 பேர் மட்டுமே சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். மீதமுள்ள 684 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்களை 3,418 தற்காலிகப் பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது”என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'கல்வி நிறுவனங்கள் மூலம் கிளஸ்டர் பரவியது. அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, விஐடி, சத்ய சாய் கல்வி நிறுவனங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் தொற்றுப் பரவல் முன்பு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவிவருகிறது. இதற்கு முன்பு கல்வி நிறுவனங்களில் கரோனா பரவிய நிலையில் அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
RT PCR சோதனை அதிகரிக்கப்படும்: சென்னையில் 46 தெருக்களில் 3க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு தெருக்களில் 5க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. RT PCR சோதனை அதிகரிக்கப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதுவரை 2500 பேருக்கு பரிசோதனை எடுத்த நிலையில் நாளையிலிருந்து 5000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கோவிட் நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்படுத்தியது. சென்னை மாநகராட்சியில் முதல் தவணை - 99.72%. இரண்டாவது தவணை - 85.5% என்ற முறையில் தடுப்பூசி அளித்து உள்ளனர்.
'பூஸ்டர் தடுப்பூசி அவசியம்' : இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆன மக்கள் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனையில் குறைவான தொகையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே, மக்கள் அவற்றைப்பயன்படுத்தவேண்டும். 8,9,10,13 (தேனாம்பேட்டை, அடையாறு) ஆகிய நான்கு மண்டலங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக இருக்கிறது.
முகக்கவசம் கட்டாயம்: சென்னையில் அனைத்து மருத்துவமனைகளும் கோவிட் தொற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் உள்ளன. விரைவில் கோவிட் கேர் சென்டர்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முகக்கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்கும் எந்த விலக்கும் அளிக்கவில்லை.
கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என முதலமைச்சர் எங்களிடம் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் நேற்று 171 என தொற்றுப்பதிவாகி இருந்த நிலையில், இன்று 220-ஐ கடக்கும்" என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விடைபெற்றது “இன்டர்நெட் எக்ஸ்புளோரர்”...!!