உத்தரப் பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் மார்ச் 8,9ஆம் தேதிகளில் டெல்லியில் இருந்துள்ளார். அப்போதே அவருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து மார்ச் 10ஆம் தேதி புறப்பட்டு ரயில் மூலம் மார்ச் 12ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளார்.
இதையடுத்து சென்னையிலுள்ள தனது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். அவருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கவே சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறுவதற்கு மார்ச் 16ஆம் தேதி வந்துள்ளார். அவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்றிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனி வார்டில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் பத்து பேரும் தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று தெரியவரும். கரோனா நோய் தொடர்பில் இருப்பவர்களுக்கும் பரவும் என்பதால் தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறை டெல்லி அரசாங்கத்திடம் அவர் சிகிச்சை பெற்ற விவரங்களைக் கேட்டு கடிதம் எழுதியது.
அதுமட்டுமின்றி அவர் வந்த ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்களின் விவரங்களையும் ரயில்வே நிர்வாகத்திடம் சுகாதாரத் துறை கேட்டுள்ளது. அதன் பின்னர் அவர் எங்கு சென்றார், அவருடன் பழகியவர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலின் அடிப்படையில் சுகாதாரத் துறையும் காவல் துறையும் இணைந்து, தனிப்படை அமைத்து தேடிவருகின்றன.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு அனுமதியில்லை