உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதால், மாநில அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 9154 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால் அங்கு வரக்கூடிய புறநோயாளிகளுக்கு அச்சம் ஏற்படுவதாக தொடர்புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இதனால் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மருத்துவமனைகள் போல தமிழ்நாட்டிலும் அமைக்கப்பட உள்ளன.
தாம்பரம் சானிட்டோரியம் மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, தஞ்சாவூர் செங்கிபட்டி காசநோய் மருத்துவமனை, சென்னை கிண்டி கிங் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளையும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதில் தாம்பரம் சானிட்டோரியம் மருத்துவமனை, மதுரை தோப்பூர் மருத்துவமனை ஆகிய இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மீதமுள்ள இரண்டு இடங்கள் விரைவில் தனிமைப்படுத்தும் மருத்துவமனையாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தற்செயலா வந்திருந்தா திரும்ப போய்டுங்க... கையெடுத்து கும்பிட்டு கேட்கும் போக்குவரத்து காவலர்