கரோனா பரவலைத் தடுக்கும் பணிக்காக தமிழ்நாடு அரசுக்கு நிதி வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதனடிப்படையில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு நிதியை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தற்போது காவலர்களின் ஒரு நாள் ஊதியத்தை கரோனா நிவாரண நிதிக்காக வழங்க தமிழ்நாடு காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் காவல்துறையில் பிரிவுகள் வாரியாக ஊதியத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் ஊதியத்தை வழங்க விருப்பமில்லாத காவலர்கள் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயுதப்படை காவலர்கள் கட்டாயமாக ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என அந்தப் பிரிவு அலுவலர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆயுதப்படை காவலர் ஒருவர் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், "ஒரு நாள் ஊதியத்தை வழங்க விருப்பமுள்ளவர்கள் கையெழுத்து போடாமலேயே விருப்பம் என்று எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளீர். ஆனால் விருப்பமில்லாதவர்கள் மட்டும் மனு அளிக்கலாம் என்று கூயிருப்பது என்ன நியாயம்.
எங்களுக்கு இருக்கும் அதிகப் பணிச் சுமையில் விருப்பமில்லை என்று மனு அளிக்க வருவது கடினமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கரோனா பணிகளில் ஈடுபட்டு வருவதால் வீட்டிற்கு சென்று வரவே நேரம் போதவில்லை. முன்பு பணியை முடித்துவிட்டு பேருந்து மூலம் வீட்டிற்குச் சென்று வந்தோம். தற்போது அதுவும் இல்லாததால் வீட்டிற்கு வரவே கடினமாக உள்ளது.
எனது ஊதியத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட பிடிக்க யாருக்கும் அதிகாரமில்லை. நான் அதை எனது விருப்பத்தோடு கொடுக்க வேண்டும். எத்தனையோ நபர்கள் கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்று வருகின்றனர். அவர்களிடம் கேட்காமல் 1000 ரூபாய் சம்பளம் பெறும் தங்களிடம் நிதி பெற்று வருவது என்ன நியாயம்.
எங்களது ஊதியம் வீட்டிற்கே போதுமானதாக இல்லை. எனது அனுமதியில்லாமல் ஊதியத்தை பிடித்தால் உச்ச நீதிமன்றம் வரை செல்ல தயாராக உள்ளேன். கரோனா பணிகளில் கடந்த 45 நாள்களாக உழைத்து வருகிறேன். எனது மனைவி, குழந்தைகளை சந்திக்க ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறேன்.
விடுமுறை கேட்டால் தர மறுக்கின்றனர். ஆனால் பணி செய்த சம்பளத்தை பிடிப்பது என்ன நியாயம்" என்று ஆதங்கமாக கூறியுள்ளார். இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:‘போலீஸாருக்கு ரெகுலராக பணம் கொடுத்து வருகிறேன்’ - ஆடியோவால் அதிர்ச்சி