சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா நோய் ஒரு கொடிய தொற்றாகும். உலகம் முழுவதும் கரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரவி வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் 21 நாட்கள் தொடர் 144 தடை உத்தரவை அமல்படுத்தியிருக்கிறது. பொதுமக்கள் 144 தடைக்கு ஒத்துழைக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியில் வரலாம். தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். நோயின் தாக்கத்தைப் பற்றி ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனாவில் இருந்து பாதுகாக்க ஒரே வழி, தனிமைப்படுத்துதல்தான். நோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
ஓமந்தூரார் மருத்துவமனை, கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் தலா 350 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. போதிய அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நவீன வசதிகளுடன் கரோனா சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வீடுகளிலேயே உள்ளனரா? என்பதை காவல்துறையினர் மூலம் கண்காணித்து வருகிறோம்.
கரோனாவுக்காக சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இரவு பகலாக 200 மருத்துவர்கள் செயலாற்றி வருகின்றனர். 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,500 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாருக்கு நோய் அறிகுறி தென்பட்டாலும், அவர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவசர காலத்துக்குக்காக 200 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 15,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மக்களுக்காக அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
தமிழ்நாட்டில் கரோனா முதலாம் கட்டத்தில்தான் உள்ளது. இரண்டாம் கட்டத்தை நோக்கி கரோனா நகர்ந்து வருகிறது. இதைத் தடுக்கவே அரசு முழு வேகத்தில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களிடம் நிலவும் பீதியைக் களைய அரசுடன் இணைந்து, ஊடகங்களும் செயல்பட வேண்டும். கொடிய நேயான கரோனாவை கட்டுப்படுத்துவதற்குதான் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரியக்கூடாது. சிலர் பொழுது போக்கிற்காக வெளியில் சுற்றித் திரிகின்றனர். எனவே பொது மக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசுடன் நீங்களும் இணைந்தால் கொடிய கரோனாவை கட்டுப்படுத்த முடியும். கரோனா அறிகுறி உள்ளதா என்பதைக் கண்டறிய 14 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டால் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தனிமைப்படுத்தப்பட்டதால் மன அழுத்தத்தில் உள்ளவர்கள், கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டால், போதுமான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். அரசு அனுமதித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்காக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.