தமிழ்நாட்டில் கரோனா பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
அதன் அடிப்படையில், கரோனா பரவலை கட்டுப்படுத்திட 'கட்டளை மையம்’ (WAR ROOM) ஒன்றை தமிழ்நாடு அரசு தொடங்கியிருந்தது. ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை குறித்து அறிய அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்டளை மையத்திற்கு தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகுமீனா ஆகிய 6 ஐ.ஏ.எஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை விவரங்களை கட்டளை மையம் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டளை மையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலராக தாரீஸ் அகமத் நியமிக்கப்பட்டுள்ளார்.