சென்னையில் தொடர்ந்து குறைந்து வந்த கரோனா, தற்போது ஐஐடியில் உள்ள மாணவர்கள் உணவகத்தின் மூலம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடி உணவகத்தில் பணிபுரிந்த 16 பேர் உள்பட 183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தற்போது கிண்டி கிங் கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 11 மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் அதிகளவில் உள்ளது.
![கரோனா தடுப்புப் பணி தீவிரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-iitm-anna-university-covid-control-action-photo-script-7204807_15122020180028_1512f_1608035428_620.jpeg)
சென்னை ஐஐடி மாணவர்களில் டிசம்பர் 9ஆம் தேதி 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்களின் அறிவுரையின் அடிப்படையில் உணவகங்கள் மூடப்பட்டன. டிசம்பர் 11ஆம் தேதி 11 நபர்களுக்கு கரோனா தொற்றின் அறிகுறிகள் அதிகளவில் கண்டறியப்பட்டன. தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது அவர்களின் அறையிலேயே உணவுகள் வழங்கப்படுகின்றன.
![கரோனா தடுப்பு பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9888802_thum.jpg)
மாநகராட்சி மூலம் இரண்டு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கரோனா பரிசோதனையும் நடைபெற்று வருகின்றன. ஐஐடியின் தரமணி, வேளச்சேரி வாயில்கள் மூடப்பட்டு, ஒரு வழியில் மட்டுமே வந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் நபர்கள் யாரும் அந்தப் பகுதியை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
![கரோனா தடுப்புப் பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-iitm-anna-university-covid-control-action-photo-script-7204807_15122020180028_1512f_1608035428_368.jpeg)
மாணவர்கள் தங்கியிருந்த அறைகள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை மாநகராட்சியால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அறிகுறிகள் இருப்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் தங்கி உள்ள விடுதி பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
![கரோனா தடுப்புப் பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-iitm-anna-university-covid-control-action-photo-script-7204807_15122020180028_1512f_1608035428_832.jpeg)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை தொடர்ந்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை நேற்று (டிசம்பர் 14) செய்யப்பட்டன. அதில், அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 750 மாணவர்களில் இன்று (டிசம்பர் 15) 478 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு நாளை (டிசம்பர் 16) தொடர்ந்து பரிசோதனை செய்யப்படும்.
![கரோனா தடுப்புப் பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-iitm-anna-university-covid-control-action-photo-script-7204807_15122020180028_1512f_1608035428_918.jpeg)
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் 300 பேருக்கும் நாளை பரிசோதனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர் கூறும்போது, ”அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான உணவகங்களில் சாப்பிடக் கூடாது. மாணவர்களுக்கான உணவுகளை நேரடியாக அறைக்கு கொண்டு சென்று அளிக்க வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
அங்கு பணிபுரியும் கட்டுமானப் பணியாளர்களுக்கு மூன்று வாரத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை