சென்னை ஐஐடி மாணவர்களுக்கு, கரோனா தொற்று டிசம்பர் 9ஆம் தேதிக்கு மேல் அதிகளவில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஐஐடி வளாகத்தில் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் கண்டறியும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா
சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் வரை (டிச.15) 1,104 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 191 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
நேற்று (டிச.16) 92 நபர்களுக்கு, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில், ஐஐடி குடியிருப்பில் இருந்த ஒருவர் உட்பட மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா நிலை?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (டிச.16 ) 251 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ததில் மாணவர்கள் யாருக்கும் புதிதாக நோய் தொற்று கண்டறியப்படவில்லை என, சென்னை மாநகராட்சி மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.