சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்துவருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சிகிச்சைப் பெற்றுவருபவர்களில் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.
தொடர்ந்து, தொற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று (ஜூன் 14) மட்டும் சென்னையில் 28,281 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 828 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் கரோனா பரவல் விகிதம் 2.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
சென்னையில் சென்ற மே மாதம் 10ஆம் தேதி கரோனா பரவல் விகிதம் 26.6 விழு்ககாடாக இருந்தது, தற்பொழுது படிப்படியாகக் குறைந்து 2.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. கரோனா இரண்டாம் அலை தொடக்கத்தில் மார்ச் மாதம் கரோனா பரவல் விகிதம் 2.5 விழுக்காடாக இருந்தது.
இருப்பினும் கிட்டத்தட்ட 13 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்தனர். தற்போது சராசரியாக 30 ஆயிரம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
மாவட்டத்தில் மொத்தம் ஐந்து லட்சத்து 25 ஆயிரத்து 826 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து லட்சத்து ஒன்பதாயிரத்து 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எட்டாயிரத்து 475 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஏழாயிரத்து 854 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் 16 ஆயிரத்து 886 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 452 நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 75 நாள்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்த கரோனா