சென்னை: கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு பணிக்காக, அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய ட்ரோன்களை பயன்படுத்தி கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் குறிப்பிடத்தகுந்த பலன் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் "தக்ஷா" தொழில்நுட்ப குழுவினர், கரோனா தொற்றுப் பேரிடருக்கு உதவும் வகையில் கிருமிநாசினி தெளிக்கும் ட்ரோன்களை முதல் அலையின் போது உருவாக்கினர். அப்போது கரோனா தொற்று அதிகளவில் இருந்த சென்னை, திருநெல்வேலி பகுதியில் ட்ரோன்களை பயன்படுத்தி வான்வழி மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.
இந்த ட்ரோன்களால் 16 லிட்டர் கிருமி நாசினிகளை எடுத்துக் கொண்டு செல்ல முடியும். மேலும் வான்வழியாக தெளிக்கும் போது நோய் தொற்றின் பரவல் வேகம் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, மேலும் 25 ட்ரோன்களை தயாரிக்க அரசு உத்தரவிட்டது. இரண்டாவது அலையின் போதும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்காெள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த சுகார்தனா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கார்த்திக் நாராயணன் கூறும்போது, “வேதிப்பொருட்களுக்கு பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழ வகைகளிலிருந்து பெறப்படும் வேதிக்கலவை, வெஜிடப்பிள் கிளிசரின் ஆயில் எனப்படும் கலவை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் ஒழிப்பு மருந்தை ட்ரோன்கள் உதவியுடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தெளித்தோம்.
இதன் மூலம் பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடிய வைரஸ், பாக்டீரியா போன்றவை 70 முதல் 80 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நோய் பரவலை தடுக்க திருநெல்வேலியில் ட்ரோன்கள் பயன்படுத்தி மருந்து தெளித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் தக்ஷா குழுவிற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது” என கூறினார்.
திருநெல்வேலியில் கரோனா தொற்று பரவல் கணிசமாக குறையத் தொடங்கியதால், தற்பொழுது தக்ஷா குழுவினர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் கரோனா தொற்று விரைவில் குறையும் என அண்ணா பல்கலைக்கழக வான்வழி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஆயிரம் நிலவே முதல் அண்ணாத்தே வரை' -வாழ்த்தோவியம் வெளியிட்ட ரசிகர்