சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் பள்ளியில் பணிபுரியும் நான்கு பெண் ஆசிரியர்கள், இரண்டு ஆண் ஆசிரியர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் ஆறு ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கரோனா பரிசோதனை மேற்கொண்ட இரண்டு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்த நிலையில், அவர்களை பள்ளி நிர்வாகம் திருப்பி அனுப்பியது. ஆனாலும் பள்ளியில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளியை மூடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் பள்ளி நிர்வாகம், நான்கு நாள்கள் விடுமுறை அறிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தியாகராஜன், "பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால், மீண்டும் பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்