கடந்த ஒராண்டாக சென்னையை அச்சுறுத்திவந்த கரோனா வைரசின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த மாதம் சென்னை ஐஐடி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால் சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியான ஐடிசி கிராண்ட் சோழாவில் பணிபுரியும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, நட்சத்திர விடுதியில் பணிபுரிந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 85 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 10ஆம் தேதிவரை அந்த விடுதியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ள கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளில் கரோனா பரிசோதனையை மாநகராட்சி செய்துவருகிறது. மேலும் அப்படி பரிசோதனை செய்ததில் அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் 12 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதன்காரணமாக, சென்னையில் இயங்கிவரும் பல நட்சத்திர விடுதிகள் கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் இடர் ஏற்பட்டுள்ளது.